நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச: மீளப் பெறப்பட்ட பிடியாணை!
புதிய இணைப்பு
கைது செய்யப்படுவதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து, அந்தப் பிடியாணையை மீளப் பெறுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (14.01.2026) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக, பிரதிவாதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
எனினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விமல் வீரவன்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் முன்னிலையாக தவறியதற்காக விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இருப்பினும், விமல் வீரவன்ச சிறிது நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், பிரதிவாதியின் பிணையாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |