வெளிநாட்டு கணக்குகளுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் பண மோசடி - இளைஞர் கைது
இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்ததாகக் கூறி, 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
டெலிகிராபிக் டிரான்ஸ்பர் (TT) மூலம் வர்த்தக வங்கிகள் ஊடாக இடம்பெற்ற பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்துள்ளது.
மேலதிக விசாரணை
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஆறு நிறுவனங்கள் ஊடாக, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் எனக் குறிப்பிடப்பட்டு இந்தப் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய எந்தவொரு பொருட்களும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் இந்தப் பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |