கோடிக்கணக்கான பணத்துடன் சினிமாப் பாணியில் கடத்தப்பட்ட தனியார் வங்கியின் வான்!
ஹட்டன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபாய் பணத்துடன் வான் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வானைக் கடத்திய சாரதியை, நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த அசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட பணம் கடத்தப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிறுவனமொன்றின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நேற்று மதியம் வந்துள்ளனர்.
அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் வானில் இருந்து இறங்கியகையோடு, சாரதி வானை செலுத்திக்கொண்டு பணத்துடன் தப்பிச்சென்றுள்ளார். நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
தலவாக்கலை - லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு வான் செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் காவல்துறை மற்றும் விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கெப்பட்டிபொல ரேந்தபொல பகுதியில் வைத்து நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் வானை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர்.
பின்னர் சாரதியையும், குறித்த பணத்தொகையையும், வானையும் கெப்பட்டிப்பொல காவல் நிலையத்தில் வைத்து ஹட்டன் காவல் நிலையத்திற்கு கையளித்துள்ளனர். சந்தேக நபரையும், பணத்தொகையையும் ஹட்டன் காவல்துறை, இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.







