சொத்து விபரம் குறித்த முறைப்பாடு: விசாரணை வலயத்தில் சிக்கிய முக்கிய அரசியல் தலைமைகள்
பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி (Kumar Jayakody) ஆகியோரின் சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) இந்த விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆரம்பக் கட்ட சொத்துச் சரிபார்ப்புகளின் போது வெளிவந்த பல சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே இப் பரந்த அளவிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் சொத்துகள்
இரு அரசியல்வாதிகளும் முன்னதாகச் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வச் சொத்துப் பிரகடனங்களுக்கும் பின்னர் அவர்களால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களுக்கும் இடையே உள்ள கடுமையான முரண்பாடுகள் குறித்து ஆணைக்குழு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் சொத்து விலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சில சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், புதிதாக வெளிப்படுத்தப்பட்ட கூடுதல் சொத்துகள் தொடர்பான முரண்பாடுகளைத் தெளிவுபடுத்துவதற்காக ஆணைக்குழு, முழுமையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
பணமோசடி
சிவில் உரிமைச் செயற்பாட்டாளரான ஜாமுனி கமாந்த துஷார டி சில்வா (Jamuni Kamanta Tushar de Silva) என்பவரால் கடந்த செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வப் முறைப்பாட்டை தொடர்ந்து இச் சொத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பாகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இம்முறைப்பாட்டில் விரிவான விசாரணை கோரப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டில் தற்போதைய அமைச்சரவையின் ஐந்து அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பட்டியலில் சுனில் வட்டகல மற்றும் குமார் ஜயகொடி தவிர, பின்வரும் முக்கிய அமைச்சர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்:
- பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake)
- வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe)
- சுனில் ஹந்துன்னெத்தி (Sunil Handunnetti)
- நலிந்த ஜயதிஸ்ஸ (Dr. Nalinda Jayatissa)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |