14 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தம் : அரச தரப்பு விளக்கம்
நாட்டிலுள்ள சுமார் 14 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும நலன்புரி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 12,06,000 அஸ்வெசும பயனாளிகள் மட்டுமே உதவித்தொகை பெற்று வருவதால், 14 இலட்சம் பேரின் உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டதாக வரும் செய்திகள் நடைமுறையில் சாத்தியமற்றவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகள் தொடர்பான தற்போதைய மீளாய்வுச் செயன்முறையின் ஒரு பகுதியாக, முதற்கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 991,000 பயனாளிகளைக் கொண்ட பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
2,000 பேர் அதிகரிப்பு
தற்போது முதற்கட்டத்தின் கீழ் சுமார் 989,000 பயனாளிகள் நலன்புரி உதவிகளைப் பெற்று வரும் நிலையில் சமீபத்திய மீளாய்வின்படி, பயனாளிகளின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக சுமார் 2,000 பேர் அதிகரித்துள்ளனர்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 215,000 பயனாளிகள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டத்திற்கான மீளாய்வு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், அதுவரை தற்போதுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இன்றி உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
நலன்புரி உதவிகள்
இதேவேளை, முதற்கட்டத்தின் கீழ் உள்ள சுமார் 740,000 மேலதிக பயனாளிகள் இன்னும் மீளாய்வுச் செயன்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, எதிர்காலத்தில் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
அஸ்வெசும நலன்புரி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பொய்யான மற்றும் தவறான செய்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |