தாக்குதலால் சர்வதேசத்தில் பாரிய நெருக்கடி - எச்சரிக்கிறது எதிர்க்கட்சி
நாட்டின் நற்பெயருக்கு பெரும் சேதம்
விஹார மகாதேவி பூங்காவை போராட்டகாரர்களுக்கு ஒதுக்குவதாக கட்சித் தலைவர் கூட்டத்தில் அறிவித்த அதிபரின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர்லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (22) கொழும்பில் தெரிவித்தார்.
செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுவோம் என அறிவித்திருந்த போதிலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை நாட்டின் நற்பெயருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.
“இந்த அமைதிப் போராட்டத்தை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருந்தது, இந்தப் போராட்டம் 24 மணி நேரத்திற்குள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அவர்கள் அறிவித்தனர். இருந்த போதிலும், இந்தத் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கட்சித் தலைவர்கள் கூட்டம்
சமீபத்தில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் போராட்டம் நடத்த விஹார மகா தேவி பூங்காவை ஒதுக்குவதாக புதிய அதிபர் எங்களிடம் கூறினார். 24 மணி நேரத்தில் வாபஸ் பெறுவோம் என அறிவித்த அப்பாவி ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சர்வதேச பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது நமது நற்பெயருக்கு பெரும் சேதாரம்.
நமது நாடு திவாலாகிக் கிடக்கும் வேளையில், குறிப்பாக அண்டை நாடுகளிடம் உதவி கேட்கும் வேளையில், இப்படித் தாக்குதல் நடத்துவது இலங்கையை கவலையில் ஆழ்த்துகிறது.
பாரிய சர்வதேச நெருக்கடி
இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே எமது நாட்டுக்கு எதிரான பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது அவற்றுடன் இந்தப் பிரச்சனைகளும் சேரும்போது பாரிய சர்வதேச நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் செல்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
