தென்கிழக்கு பல்கலையில் 1ம் வருட மாணவர்கள் மீது தாக்குதல்
தென்கிழக்கு பல்கலைக்கழக (South Eastern University) பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை - ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று (14) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது காயமடைந்த 4 மாணவர்கள் மற்றும் சாரதி ஒருவர் உட்பட ஐவர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
22 மாணவர்கள் இடைநீக்கம்
மேலும் கடந்த மாதமும் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதேவேளை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதல் ஆண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

