மாநகரசபை வளாகத்திற்குள் வைத்து வவுனியா மாநகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்
வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மீது மாநகரசபை வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேயர் தலைமையில் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (09.10) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாநகரசபை அமர்வு நடைபெறவிருந்த நிலையில மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் மாநகரசபையில் பிரச்சன்னமாகியிருந்தனர். இதன்போது மாநகர சபையால் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்தும் நபர் அங்கு வருகை தந்து மாநகரசபை உறுப்பினர்கள் சிலருடன் தனது வியாபார நிலையம் தொடர்பில் பேசியுள்ளார்.
மாநகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்
இதன்போது அவ்விடத்தில் நின்ற வவுனியா மாநகரசபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸ் அவர்களுடன், தனது ஏசி பூட்டிய வர்த்தக நிலையத்தை ஏன் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக கூறி முரண்பட்டுள்ளதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி குறித்த மாநகரசபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, ஏனைய சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களால் குறித்த நபர் அங்கிருநது வெளியேற்றப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாநகர மேயர் சு.காண்டீபன் தலைமையில் வவுனியா காவல் நிலையத்திற்கு சென்ற சபை உறுப்பினர்கள முறைப்பாட்டினை பதிவு செய்தனர்.
வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு
வவுனியா காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபரும் தன் மீது மாநகரசபை உறுப்பினர் தாக்குதல் நடத்தியதாக வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


