கரூர் வழக்கு - தனி நீதிபதி தலையிட்டது தவறு : உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்குள் வரும் நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி தமிழ்நாட்டின் கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
41 பேர் பலியான வழக்கு
இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
அந்த மனுவில், “கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித்தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது.
இவை விஜய், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது. த.வெ.க. தரப்பு கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் காவல்துறை அதிகாரி அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு சில வன்முறைகளால் முன்கூட்டியே திட்டமிட்ட சதியே காரணம் என்பதை மறுக்க முடியாது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இரத்து செய்ய வேண்டும். கரூர் சம்பவத்தை மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று ஒக்டோபர் 8ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களையும் ஒக்டோபர் 10ம் திகதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.
சென்னை உயர் நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரில் தொடர்பான வழக்கில் த.வெ.க தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ஆர்யமா சுந்தரம் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு வரம்புக்குள் விசாரிக்க வேண்டும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது.
அப்படி விசாரிக்க வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி அனுமதி பெற்றதாக தகவல் இல்லை என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதால் விஜய் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக தமிழக அரச வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது தெரிவித்துள்ளார்.
இந்த கூற்று முற்றிலும் தவறானது என்றும் காவல்துறை பாதுகாப்புடன் விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார் என்று வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதத்தை முன்வைத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், விஜய மற்றும் த.வெ.க எதிர்மனு தாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனரா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை
இதற்கு த.வெ.க தரப்பில், “உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில், த.வெ.க-வோ, விஜயோ எதிர் மனுதாரராக இல்லை. த.வெ.க-வோ, விஜயோ எதிர் மனுதாரராக இல்லாதபோது எதற்காக எங்களைப் பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில், விஜயின் தலைமைப் பண்பு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் விஜய்யைப் பற்றி அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளது“ என்று வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதிட்டார்.
சம்பவம் நடந்த பிறகு, காவல்துறைதான் விஜயை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் அதன் பேரில்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றாதாகவும் த.வெ.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை த.வெ.க நிர்வாகிகள் பார்ப்பதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த விசாரனை மீது நம்பிக்கை குறைவாக உள்ளது. உண்மை நிலை வெளியே கொண்டுவர வேண்டும். நாங்கள் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை எதிர்க்கவில்லை.
காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அமைத்ததை எதிர்க்கிறோம். அதனால், உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரி தலைமையில் அமைத்திருக்கும் எஸ்.ஐ.டி-க்கு மாற்றாக, உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என த.வெ.க தரப்பில் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையினர்
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு காவல்துறையினரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி மூலம் உண்மை வெளிவராது தமிழக வெற்றி கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
இதையடுத்து பரப்புரை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்று ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. பரப்புரை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு 41 பேர் உயிரிழந்துள்ளதால் தான் சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பாதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
