கத்திக் குத்துக்கு இலக்கான இலங்கை பெண் - திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்..!
தமிழகத்தின் மண்டபத்தை சேர்ந்த இளைஞரை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ள இலங்கை பெண் திருமணம் செய்ய மறுத்ததால் இலங்கை பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
காயமடைந்த இலங்கை பெண் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை திருகோணமலை மாவட்டம் புல்மெட்டை சேர்ந்தவர் முகமது சாதிக் அவரது மனைவி சச்சிநிஷ்தானி. இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.
மண்டபம் அகதிகள் முகாம்
இவர்களது மகள் சல்மியா பானு இலங்கையிலிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு விமானம் மூலமாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் அவருடைய பெற்றோருடன் தங்கி உள்ளார்.
சல்மியா பானுவுக்கு இலங்கையில் இருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணமாகி கடந்த 2018ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த காசி விக்னேஸ்வரன் என்பவருக்கும் சல்மியா பானுக்கும் இடையே கடந்தாண்டு காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் காசி விக்னேஸ்வரனின் அண்ணனுக்கு திருமணம் ஆகாததால் அவர் திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
சரமாரியாக தாக்கப்பட்ட பெண்
இதனிடையே சனிக்கிழமை இரவு மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சல்மியா பானு வீட்டுக்கு வந்த காசி விக்னேஸ்வரன் தன்னை உடனடியாக கல்யாணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் சல்மியா பானு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த காசி விக்னேஸ்வரன் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சல்மியா பானுவை சரமாரியாக கையில் வெட்டினார்.
இதனை தடுக்க வந்த சல்மியா பானுவின் அம்மாவின் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டது.
சல்மியா பானுவை கத்தியால் தாக்கிய காசி விக்னேஸ்வரனை மண்டபம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
