நாட்டில் மீண்டுமொரு கலவர சூழலை ஏற்படுத்த முயற்சி - தவராசா கலையரசன்
தென்னிலங்கையிலே சில அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் இந்த நாட்டில் மீண்டுமொரு கலவர சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று செயற்படுகின்றார்கள். இதில் நாங்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பெரிய நீலாவணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசமானதொரு சூழல்
“இந்த நாட்டிலே தற்போதிருக்கின்ற பெருளாதார நெருக்கடி நிலையில் அதிகமான இளைஞர்கள் வெளிநாடு செல்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த ரீதியிலே எமது நாடு மிகவும் மோசமானதொரு சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழல் இன்னும் நீடிக்குமானால் இiதைவிட மேலும் மோசமான வறுமை மக்கள் மத்தியில் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த நாடு போரால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையை சந்தித்திருந்தும் அது போன்றதொரு கலவர சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று தென்னிலங்கையிலே சில அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் செயற்படுகின்றார்கள். இதிலும் நாங்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
இளைஞர்கள் இவ்வாறான விடயங்களையெல்லாம் கருத்திற் கொள்ளாது அவர்களின் வலைக்குள் சிக்குண்டுவிடாது, எமது பிரதேசத்தில் எமது உரிமை கல்வி உட்பட ஏனைய பொருளாதார ரீதியான வளர்ச்சியிலே முன்நின்று உழைக்க வேண்டும்.
ஆனாலும் எமது இளைஞர்களுக்கான வளங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எதிர்காலத்தில் அதனையும் நாங்கள் நிவாத்தி செய்து எமது இளைஞர் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.