சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிடியாணை
இது தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மகேந்திரனுக்கு அழைப்பானை அனுப்பியிருந்தது.
இருப்பினும், அன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை, பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மகேந்திரனை கைது செய்ய கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
நாடு கடத்தல்
இதேவேளை, மகேந்திரனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு நாடு கடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
