அருட்தந்தை சிறில் காமினி தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ (Sril Gamini Fernando) கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தினை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த மாதம் 23ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்த கருத்து தொடர்பில் அரச புலனாய்வுப் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1), (2) ஆம் உறுப்புரைகள் பிரகாரமும், தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முதன் முதலாக கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி முன்னிலையாகுமாறு, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்திருந்தது.
எனினும் தன்னை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அவர் கைது செய்டயப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.