அவுஸ்ரேலியாவின் பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்துள்ள போராட்டக்காரர்கள்
அவுஸ்ரேலியா நாட்டில் பழங்குடியினரின் இறையாண்மைக்காக போராடிய போராட்டக்காரர்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்ரேலியா, கான்பெர்ரா நகரில் நேற்று நடந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் அங்குள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்துள்ளனர்.
இதில் அந்த கட்டிடத்தின் முன்கதவுகள் தீப்பற்றி எரிந்தன. இந்த தீ வைப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த கட்டடத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு பிரதமர் ஸ்காட் மோரீசன் (Scott Morrison) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அவுஸ்ரேலியா இப்படி செயல்படுவதில்லை. இந்த நாட்டின் ஜனநாயக சின்னத்தை அவுஸ்ரேலியர்கள் வந்து தீயிட்டு கொளுத்துவதை பார்க்கும் நடத்தை எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. திகைத்துப்போய் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டதை அரசு தரப்பு எம்.பி.க்கள் கடுமையாக சாடினர். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.