அதிகாலையில் நிலநடுக்கத்தால் உலுக்கப்பட்ட அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு அருகில் இன்று (03) அதிகாலை 2.01 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (Geoscience Australia) தகவலின்படி, மெல்பேர்னில் இருந்து சுமார் 130 கிலோமீற்றர் தென்கிழக்கே, தெற்கு கிப்ஸ்லாந்தில் உள்ள அரவட்டா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மெல்பேர்ன் உள்ளிட்ட விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் உடனடி ஆபத்து
மெல்பேர்ன் மத்திய வர்த்தகப் பகுதி உள்ளிட்ட பகுதிகளுடன் கீலொங், ட்ராரல்கொன், மான்ஸ்ஃபீல்ட், பாலரட் மற்றும் பெண்டிகோ போன்ற தொலைதூர பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் வீடுகளின் ஜன்னல்கள் அதிர்ந்ததுடன், பொருட்கள் கீழே விழுந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நிலநடுக்கத்தால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என விக்டோரியா அவசரகால முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய கட்டிட சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதிகாலை 2.57 மணியளவில் சிறிய அளவிலான பிந்தைய அதிர்வொன்றும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மெல்பேர்னுக்கு அருகில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், விக்டோரியா மாநிலத்தில் அவ்வப்போது நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |