சர்ச்சைக்குரிய மயக்க மருந்து பயன்பாட்டிலிருந்து நீக்கம்!
இலங்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இரு மயக்க மருந்துகளுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய மயக்க மருந்து இன்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தரமற்ற மருந்துகள் இறக்குமதி

கடந்த காலங்களில் சில வகையான மயக்க மருந்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் போது சிலர் உயிரிழந்திருந்ததாகவும் இதையடுத்து, குறித்த மயக்க மருந்து தொடர்பில் சுகாதார தரப்பினர் அதிக கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த மருந்துகளின் பாவனை நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 வீதமானவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.