சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் விடுத்துள்ள பணிப்பு
திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்த விவகாரம் , பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் , எதிர்காலத்தில் இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்வது குறித்து அவதானம் செலுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
திஸ்ஸமகாராம, வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த சீன தூதரகம், குறித்த தொழிலாளர்கள், சீன இராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும் பதிலளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆடை சீன இராணுவத்துக்கோ அல்லது ஏதேனும் இராணுவ அமைப்புக்கோ சொந்தமானது அல்ல எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது எழுந்துள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான சீன தூதரகத்தினால் குறித்த பகுதியில் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் பணிகளில் ஈடுபடுகின்றபோது இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்வது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.