கொவிட் சிகிச்சை மையங்களாக மாறும் ஆயுர்வேத வைத்தியசாலைகள்
நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதன் ஊடாக சுமார் 3,500 கட்டில்களை கொவிட் சிகிச்சைக்காக உட்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றுபவர்களுக்கு கொவிட் சிகிச்சை தொடர்பில் பயிற்சி வழங்கவுள்ளதுடன் அவர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிகிச்சைகளுக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தனிப்பட்ட பாதுகாப்பு ஆடை கருவிகளை விரைவாக வழங்குவதற்கும், கொவிட் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனைகளில் மாற்றங்களை விரைவாக செய்வதற்கும், அதற்காக சுகாதார மற்றும் நிதி அமைச்சகம் ஒன்றிணைந்துள்ளது.
சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவது குறித்தும், இங்குள்ள பணிகள் முறையாக நடைபெற்று வருவது குறித்து விசாரிக்கவும், சத்தான உணவை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, உள்ளூர் மருத்துவ அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர, ஆயுர்வேத ஆராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாவின்னா ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சேனக பிலபிட்டி , மாகாண ஆயுர்வேத பணிப்பாளர், சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர்கள், துணை கண்காணிப்பாளர் தளபதிகள் மற்றும் பலர் பங்குபற்றினர்.
