கனடாவில் வீடொன்றில் வெளிக்கிளம்பிய துர்நாற்றம் -தமிழ் பெண்மணியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைநிலை
வீடொன்றிலிருந்து வீசிய துர்நாற்றம்
கனடாவின் ரொறன்ரோவில் குடியிருப்பு ஒன்றில் வீடொன்றிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அது தொடர்பில் தமிழ் பெண்மணி ஒருவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனடாவின் ரொறன்ரோவில் ஷெர்போர்ன் தெருவில் குடியிருக்கும் விஜி முருகையா என்ற தமிழ் பெண்மணி தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த மே மாத இறுதியில் கெட்ட வாசனை வீசுவதாக அடையாளம் கண்டுள்ளார். மட்டுமன்றி, தமது வீட்டு உரிமையாளரிடம் அண்டை வீட்டு முதியவரை சில நாட்களாக வெளியே காணவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பூட்டப்பட்டிருந்த அறை
இந்த நிலையில் ஜூன் 14ம் திகதி அவசர உதவிக்குழுவினர் பூட்டப்பட்டிருந்த அறை ஒன்றில் இருந்து ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். முழுமையாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அந்த சடலத்தில் இருந்து கெட்ட வாசனை அப்பகுதி முழுவதும் வீசியதாகவும், அது தமக்கு அதிர்ச்சியாக இருந்து எனவும் விஜி முருகையா தெரிவித்துள்ளார்.
மேலும், பத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள அறைகளில் தங்கியிருந்தனர் எனவும், இந்த கெட்ட வாடை காரணமாக பெரும்பாலானவர்கள் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வாரத்தில் இருந்து 10 முதல் 15 முறை தமது வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டு, முழுமையாக அந்த அறையை சுத்தம் செய்ய கோரி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனியார் சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றை பணிக்கு அமர்த்தியதாக அந்த வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாக விஜி முருகையா தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த தமிழ் பெண்மணி
இருப்பினும், சட்ட சிக்கல் காரணமாக எந்த சுத்தம் செய்யும் நிறுவனமும் ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டில் தற்போது விஜி முருகையாவால் நிம்மதியாக குடியிருக்க முடியவில்லை எனவும், ஸ்கார்பரோவில் உள்ள நண்பர்கள் குடியிருப்பில் தங்கி வருவதாகவும் விஜி முருகையா தெரிவித்துள்ளார்.
