பதுளை, பசறை - யூரி தோட்ட ,மாப்பகல பிரிவில் நெடுங் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பணிப்புரையை அடுத்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் மேற்படி தோட்டத்துக்கு பிரதிநிதிகள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து நேற்று (25.09) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தங்குமிட வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இந்த குழு ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதுடன், அவர்களுக்கான மாற்று இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு அறிக்கையொன்றையும் கையளிக்கவுள்ளது.
ஜீவனின் கவனத்துக்கு
தீ விபத்தால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் வீடு மற்றும் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் நடக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பற்ற மின்கம்பங்கள் மின் ஒழுக்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றை சீர் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.