சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணர்: சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர்
சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் வைத்திய நிபுணர், தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவர் பிரபாத் அனுராத தயரத்ன நேற்று (23.08.2026) காலை காணாமல் போனதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன் பின்னர் பதுளை - மஹியங்கனை வீதியில், மப்பகடவேவ பகுதியில் உள்ள 17ஆவது மைல் கல் அருகிலுள்ள வனப்பகுதியில், காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் விசேட அறிவிப்பு
இதன்போது, அவரது கார் நேற்று இரவு குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவரது சடலம் காரிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் அமைந்திருந்த பாறையொன்றின் அருகிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திலிருந்து மூன்று வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், மருத்துவர் மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளைப் பயன்படுத்தி வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |