முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மனுவை எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு முடிவு செய்துள்ளது.
கரம் போர்ட் சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமது தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு உட்பட்டு, தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி குறித்த மனுக்கள் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
அதற்கமைய, இன்றைய தினம் (25) இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த மனுக்கள் தொடர்பான அறிவித்தல் தமக்கு கிடைக்கவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள், பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தங்கள் சிறைத் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதால், இறுதி முடிவு வரும் வரை தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

