பல்கலைக்கழக ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரைப் பிரயோகம்
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களால் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக தொடர் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
கடந்த 8 வருடங்களாக கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சனை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பலவற்றை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நுகேகொடயில் (Nugegoda) பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களால் இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura), நாவல திறந்த பல்கலைக்கழக (The Open University of Sri Lanka) மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக மிரிஹான (Mirihana) தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
இதற்கு அமைய நுகேகொட (Nugegoda) நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுலா வித்தியாலாயம் (Anula Vidyalaya), புனித ஜோசப் பெண்கள் கல்லூரி (St.Joseph Girls College), சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி (Samudradevi Balika Vidyalaya), புனித ஜோன்ஸ் ஆண்கள் கல்லூரி (St. John’s Boys’ College), சுஜாதா பெண்கள் கல்லூரி (Sujatha Girls’ College) ஆகியவை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மையங்களாகவும் (G.C.E. O/L Examination), பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் இயங்கி வருகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தினால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |