எப்படி தொற்றியது கொரோனா? அமைச்சர் வெளியிட்ட தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது சாரதியிடம் இருந்து தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகக் கவசத்தை அகற்றுவதில்லை எனக் கூறிய அவர், அன்றைய தினம் வாகனத்தில் பயணிக்கும் போது முகக் கவசத்தை அகற்றி பயணித்தமையினாலேயே தனக்கு தொற்று ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், கொவிட் தொற்றுக்குள்ளானோருடன் தான் பழகியிருந்த போதிலும், முகக் கவசத்தை உரிய வகையில் அணிந்திருந்தமையினால் தனக்கு தொற்று ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரே ஆலோசனை என்னவென்றால், நீங்கள் ஒருபோதும் கவசத்தை அகற்றக்கூடாது. ஏனென்றால், நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரெஸ்பிரோன் நானோ ஏவி 99 முகமூடியை நீண்ட காலமாக அணிந்திருந்தேன், மேலும் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பல மக்களிடையே நான் ஆரோக்கியமாக இருந்த பல நிகழ்வுகள் உள்ளன.
எனவே ஒரு கணம் கூட உங்களை பாதுகாக்கும் முகமூடியை அகற்றாதீர்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.