அரசியலில் இருந்து விலகத் தயார் - முழு மனதோடு கூறிய அமைச்சர் பந்துல
தாம் தரகுப் பணம் பெற்றுக்கொண்டதாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், சுயநலமற்ற அரசியலை மேற்கொள்வதே தமது நோக்கமெனவும் நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அமைச்சரும், அதிகாரிகளும் பெரும் வர்த்தகர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“என்னுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்தில் நான் 50 சதத்தை தரகுப்பணமாக பெற்றுள்ளேன் என உறுதிப்படுத்தினால் நான் இந்த சபையில் இருந்து மாத்திரம் அல்ல, முழு அரசியலிலும் இருந்து விலகிக்கொள்கின்றேன் என்பதை முழு மனதோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
இப்படியான அசிங்கமான அரசியல் செய்ய வேண்டாம். இந்தச் சபையில் அனைவரும் இறக்கப்போகும் மனிதர்களாக பேச வேண்டும்.
ஏனென்றால் நிறைய பணம் படைத்தவர்கள், பலமானவர்கள் எம்முடைய எத்தனையோ அன்பர்கள் இந்த கொவிட் தொற்றினால் இறந்துவிட்டனர். கிளி மஹாராஜா இறந்துவிட்டார், முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார இறந்துவிட்டார். அவருக்கு நாடாளுமன்ற மரியாதையைக்கூட செலுத்த முடியாமல் போனது. பிரபலத்தின் உச்சத்திற்க்கே சென்ற பாடகர் சுனில் பெரேரா இறந்துவிட்டார். அரசியல் பலம் வாய்ந்த மங்கள சமரவீர உயிரிழந்தார். ஆகவே நாம் அனைவரும் இறக்கப்போகும் மனிதர்களாக சிந்திக்க வேண்டும்.
எமக்கு விகாரைகளுக்கு செல்ல கூடிய இன்னும் எத்தனை பௌர்ணமி நாட்கள் இருக்குமென யோசிக்க வேண்டும். நாம் செல்லும் போது எதையும் எடுத்துச்செல்ல போவதில்லை. கொள்ளையடித்து, இலஞ்சம் பெற்று, மோசடி செய்து யாரும் எதனையும் கொண்டுபோகப்போவதில்லை.
நாம் அவ்வாறு இல்லாமல் சுயாதீனமான அரசியல் செய்து முன்மாதிரியாக இருப்பவர்கள். ஆகவே உண்மையின் பிரகாரம் அனைவரும் செயற்படுங்கள்” என்றார்.