நார் நூல்களை வைத்து கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் நிலையே ஸ்ரீலங்கா நாட்டு மக்களுக்கு!
ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பங்களாதேஷிடம் கடன் கேட்கின்ற அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த தகவலை அம்பலப்படுத்தினார். ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த வாரம் இருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக பங்களாதேஷிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பங்களாதேஷ் நாட்டுப் பிரதமர் ஷெய்க் ஹஷீனாவின் அழைப்பின் பேரிலேயே அவரது இந்த விஜயம் அமைந்திருந்தது.
பிரதமர் மஹிந்தவின் இந்த விஜயத்தின் போது, அந்நாட்டு அரசாங்கத்திடம் கடன் தொகையொன்றை கோரியிருந்ததாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பங்களாதேஷ் நாட்டிடமும் கடன் கேட்கின்ற அளவுக்கு ஸ்ரீலங்கா வீழ்ந்துவிட்டதா? இந்த நிலைமைக்கு மத்தியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்த அடிப்படையில் எமது நாட்டின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.
கடந்த காலத்தில் பங்காதேஷிடம் இருந்து நாங்கள் நார் வகையான தும்புகளை மாத்திரமே இறக்குமதி செய்திருக்கின்றோம்.
இந்த நிலையில், அவ்வாறு இறக்குமதி செய்த நார் நூல்களை வைத்து கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலையே ஸ்ரீலங்கா நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் எமது பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வாராயின் அந்நாடுகளிலுள்ள தலைவர்கள் தலைமறைவாகிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.