மதுபான உரிமங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
மதுபான உரிமங்கள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, மதுபான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான வரி அனுமதிச் சான்றிதழ்களைப் பெறும்போது, நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உரிய உரிமதாரர் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் வரி செலுத்தப்படாவிட்டால் மதுபான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது வரி செலுத்தப்படாததற்கான காரணங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வருமான அறிக்கை
மதுபான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான வரி அனுமதிச் சான்றிதழைப் பெறுவதற்கு, 2023/24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த அறிக்கையின்படி வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தடன், 2024/25 மதிப்பீட்டு ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் சுய மதிப்பீட்டின் மூலம் செலுத்தப்பட வேண்டிய பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடையும் காலாண்டுகளுக்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்து, அந்த அறிக்கைகளின்படி மதிப்புக் கூட்டு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியைச் செலுத்தி, வரி அனுமதி பெறும் திகதிக்குள் செலுத்த வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |