இஸ்ரேல் - ஹமாஸ் போரில் தவறு யார் பக்கம்: மனம் திறந்தார் ஒபாமா
"ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் பயங்கரமானது, அது நியாயமற்ற ஓர் செயலாகும், அதே போல் பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் புரியும் ஆக்கிரமிப்புக்களும் நியாயமற்றவையே" என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்தை அண்மித்து நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போரை நிறுத்த மாட்டோம்
"கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய கோர தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக வேரறுக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என விடாப்பிடியாக இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்கிறது.
நாளுக்கு நாள் உக்கிரமடையும் இந்தப் போரில் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஹமாஸ் செய்த குற்றங்களுக்காக
பலஸ்தீன மக்களுக்கு உலக நாடுகள் அடிப்படை மனிதாபிமான உதவிகளை செய்து வந்தாலும், ஐ.நா முகாம் அமைந்துள்ள பகுதியை தவிர ஏனைய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இப்போதைய நிலவரப்படி ஹமாஸ் செய்த குற்றங்களுக்காக எந்த வித தொடர்பும் அறியாத அப்பாவி பொதுமக்களே பலியாகிறார்கள்." என ஒபாமா தெரிவித்துள்ளார்.