ரணிலுக்கு அதிகாரங்களை கொடுப்பது பிரச்சினைக்குரியது!! பசில் சீற்றம்
6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரத்தை 253,000 வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மாற்றுவது பிரச்சினைக்குரியது என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இன்று தனது நாடாளுமன்ற பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த பின்னர் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எந்த பதவிகளும் வகிக்கப்போவதில்லை
"அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பதவியையும் வகிப்பதைத் தவிர்ப்பதற்காக நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்.
எனினும், நான் அரசியல் களத்தில் தொடர்ந்து ஈடுபடுவேன், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் அரசாங்க விவகாரங்களில் ஈடுபடுவேன். நான் அரசியல் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவன் மற்றும் பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.
பல்வேறு வழக்குகள்
என் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, பல மாதங்கள் காவலில் வைக்கப்பட்டேன். எனினும், வழக்குகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளேன். கடந்த வாரம் தான் எனது இறுதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
21 வது திருத்தத்திற்கு எதிரானவன்
தனிப்பட்ட முறையில் நான் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு எதிரானவன். 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற அரச தலைவரின் அதிகாரத்தை 253,000 வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்ற பிரதமருக்கு மாற்றுவது சரியானதல்ல.
நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நான் ஆதரவாக இருக்கிறேன். ஆனால் தற்போதைய பிரதமர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல, அவர் அரச தலைவரால் நியமிக்கப்பட்டவர். அவ்வாறான ஓர் பிரதமருக்கு அதிகாரங்களை வழங்குவது பிரச்சினைக்குரியது.
இரட்டைக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானவன்
அத்தோடு அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமைச் சட்டத்துக்கும் நான் எதிரானவன், நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்" எனக் குறிப்பிட்டார்.
