பசிலின் நாடாளுமன்ற வருகை காலத்தின் தேவை - நிமல் லான்சா எடுத்துரைப்பு
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வெளியிலிருந்து செயற்படுவதைவிட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே காலத்தின் தேவையாகும் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
பஷில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் முழு பொருளாதார முகாமைத்துவம் , நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட பணிகளில் பஷில் அர்ப்பணிப்புடன் பல சேவைகளை ஆற்றியிருக்கிறார்.
வடக்கின் வசந்தம் , கிழக்கின் உதயம், கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் உள்ளிட்ட வெவ்வேறு வேலைத்திட்டங்களுக்கு அவர் தலைமைத்துவம் வகித்துள்ளார்.
ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் ஊடாகவும் , வரவு - செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கும் , பிரதமருக்கும் பக்கபலமாக இருப்பதற்கு பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்.