கொதி நிலையில் கொழும்பு அரசியல் - நாடு திரும்புகிறார் பஸில்
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தனிப்பட்ட விஜயமாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருந்தார். இவ்வாறு சென்றவர் ஆறு வாரம் களித்து நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் அண்மைய நாட்களாக எரிபொருள் விலையேற்றம், பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமை, கொரோனா தொற்று என நாடு பொருளாதார ரீதியாக சிக்கலில் உள்ள நிலையில் அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புவது முக்கியத்துவம் பெறுகிறது.
அதுமாத்திரமல்லாது தற்போது எரிபொருள் விலையேற்றத்தினால் ராஜபக்ச அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டுவந்த பௌத்த தேரர்கள் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் எதிர் கட்சியினர் ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வருவதாகவும் சூளுரைத்துள்ளனர்.
இந்நிலையில், கோட்டாபய தலைமையிலான அரசை நிறுவுவதற்கு மூல காரணமாக இருந்த பசில் ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புவது முக்கியமானதாக கருதப்படுகிறது.