வெட்கக்கேடான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் -பொன்சேகா கடும் கண்டனம்
வழமையான அரச பயங்கரவாதம் கட்டவிழ்ப்பு
காலி முகத்திடலில் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் மிகவும் அவமானகரமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தில் வெறுக்கத்தக்க படையினரின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பதவிப் பிரமாணம் செய்து 24 மணித்தியாலங்களுக்குள் காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் தனது வழமையான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
இராணுவமும் காவல்துறையும் நடத்திய மனிதாபிமானமற்ற வெட்கக்கேடான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை முழு நாடும் வெறுப்புடன் கண்டிக்க வேண்டும். மே 9ஆம் திகதி, தமது உள்ளூர் குண்டர்களைப் பயன்படுத்தி அடக்க முடியாத போராட்டத்தின் மூலம் எழுந்த பலத்த பொது எதிர்ப்பை எதிர்கொண்டு, தப்பியோடிய ராஜபக்சாக்கள் அரச பயங்கரவாதமாக தமது பயங்கரவாத அரசியலை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மக்களுடன் இணைந்து நின்று ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதியின் ஆயுதங்களை இயக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ராஜபக்சவின் கைப்பாவையான ரணில்
ராஜபக்சவின் கைப்பாவையான ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும், வழமையான 88-89 பட்டலந்த பாணியில் மக்களை ஒடுக்கும் பயங்கர ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்குமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போராட்டத்தில் உண்மையான வெற்றியுடன் இதற்கு தீர்வு இல்லை என்பதையும், ஜனநாயக ரீதியான ஜனரஞ்சக மாற்றத்தை நாடு எதிர்பார்க்க முடியாது என்பதையும் மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
கால அவகாசமோ, இடைநிறுத்தமோ கொடுக்காமல் ஊழல் ஆட்சியாளர்களை தூக்கி எறிய மக்கள் ஒவ்வொருவராக முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
