ஊடகவியலாளர்களை மிரட்டும் சிறிலங்கா காவல்துறை: சர்வதேச ஊடகவலையமைப்பு கண்டனம்
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் துணிச்சலுடன் ஊடக கடமையில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தப்படுவதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடக வலையமைப்பான CPJ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயல்படவும் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து உடன் நிறுத்துமாறும் சர்வதேச ஊடக வலையமைப்பான CPJ குறிப்பிட்டுள்ளது.
மூன்று மணி நேர விசாரணை
கடந்த மாதம் 8 ஆம் திகதி மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி வாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் மீதும் இலங்கை காவல்துறை சுமார் மூன்று மணி நேர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின் வாக்குமூலம் பெறப்பட்டு ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் இனவாத கருத்துக்களை ஒளிப்பதிவு செய்து அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதன் காரணமாகவும் சுமார் இரண்டு மணி நேர விசாரணையும் வாக்குமூலமும் பெறப்பட்டு எடுக்கப்பட்ட காணொளி பதிவுகளை காவல்துறையினர் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஊடக சுதந்திரம்
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கும் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பதற்குமான செயற்பாடாக அமைவதால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ஊடக அமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.