மட்டக்களப்பில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் : 35 ஆவது ஆண்டில் நினைவு கூரல்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (21.09.2025) ஊர்ப் பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 1990, செப்டம்பர்,21,ல் இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து கூட்டாக 17 தமிழர்களை கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் தமிழினப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
நித்திரையில் இருந்த மக்களை எழுப்பி படுகொலை
சம்பவ தினமான அன்று வெள்ளிக்கிழமை (21/09/1990) இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென, கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்கென இவ்வாறு அழைத்துச் சென்றவர்களை நோக்கி இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர்கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும் பலர் படு காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 17, பேர் படுகொலை
இந்தப்படுகொலையில் 09, ஆண்களும் 08 பெண்களும் என மொத்தம் 17, பேர் இதில் சிறு குழந்தைகளும் உள்ளனர்.
இன்று 2025,செப்டம்பர்,21, ல் 35, வது ஆண்டு கடந்தும் இந்த இனப்படுகொலைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லையென இறந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் போது இறந்தவர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாத காவல்துறையின் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தமையால் ஊர் உறவுகளும் நினைவு வணக்கத்தில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் பல வருடங்களாக இருந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





