82 நாட்களாக தொடரும் போராட்டம்: மனநோயிற்கு ஆளாகும் நிலையில் பண்ணையாளர்கள்(படங்கள்)
பண்ணையாளர்களின் போராட்டம் நடாத்தி 82 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் 80க்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.
சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு 82 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச சார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத குடியேற்றம்
நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த காவல்துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லையென்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும், சட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் குறித்த தாக்குதல்களை நடாத்துவோர் குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள காவல்துறை காவலரணுக்கு சென்று முறைப்பாடுகளை செய்தால் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை.
பண்ணையாளர்கள் கவலை
கரடியனாறு காவல் நிலையத்திற்கு வந்து முறைப்பாடுகளை செய்தால் காவல்துறையினர் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதன் காரணமாக அவர்கள் மனநோயிற்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்