காணாமலாக்கப்பட்டோர் விடயம் கூட்டமைப்பின் அரசியல் ஏமாற்று வேலை!
தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஓரவஞ்சனையாக செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் சரியான பதில்களை வழங்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓரவஞ்சனையாக செயற்படுகின்றது. அவர்கள் தமிழ் மக்களில் சிலரை கூட்டி இது சம்பந்தமாக கூட்டம் நடத்துகின்றனர். நான் கடந்த வருடத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் நீதிவான்களாக இருந்தால் நியாயவாதிகளாக இருந்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களை அதாவது விடுதலைப்புலிகள் போன்ற தமிழ் ஆயுதக்குழுக்களினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என கூறி இருந்தேன்.
ஆனால் அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை. ஆனால் எங்களை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் ஏமாற்று வேலையாக தான் இதை செய்து கொண்டிருப்பதாக நாங்கள் பார்க்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு முட்டுக்கொண்டிருந்த வேளையில் கூட இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயங்களை பெற்றுக்கொடுக்கவில்லை.
தமிழ் மக்களாக இருக்கட்டும் முஸ்லிம் மக்களாக இருக்கட்டும் எவருக்கும் நியாயம் பெற்றுகொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் சில விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவி மக்களை ஏமாற்றியதை தான் கண்டோம். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது இவ்விடயத்தில் ஒரு நாடகம் ஒன்றினை நடாத்திக்கொண்டிருப்பதாகவே காண்கின்றோம்.
எனவே இந்த நாடகங்களை எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுவிட்டு நேர்மையாக செயற்பட்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஆயுத போராளிகளினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான பதில்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்