பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடு- நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் திடீர் நடவடிக்கை!
மட்டக்களப்பின் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பொதிகள் நுகர்வோர் அதிகாரசபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையில் பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு காத்தான்குடியில் பலசரக்கு கடைகளில் பதுக்கி வைத்திருந்த பால்மா பொதிகள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடடிக்கையின் போது பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பொதிகளை மீட்டு மக்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
பொது மக்களிடத்திலிருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றி வளைப்பு சோதனை மேற்கொண்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.
அதேவேளை, மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பகுதியிலுள்ள வீடு ஒன்றில்,சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை அடம்பன் காவல்துறையினர் இன்று மீட்டுள்ளனர்.
இதன் போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 29 மூட்டைகளைக் கொண்ட 1164 கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டிகள் மீட்க்கப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளரையும் அடம்பன் காவல்துறையிர் கைது செய்துள்ளனர்.



