மட்டக்களப்பில் சட்டத்தரணியால் யுவதிக்கு நேர்ந்த கதி...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
மட்டக்களப்பில் யுவதி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி காவல்துறை பிரிவைச் சேர்ந்த 24 வயதுடைய நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (30-01-2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே சந்தேகநபரான சட்டத்தரணிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யுவதி தனிமை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி 2023 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியின் காரியாலயத்தில் வாராந்தம் 3,000 ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
2025 செப்டம்பர் மாதம் சட்டத்தரணி தகாதமுறைக்கு உட்படுத்த முயன்றபோது யுவதி அதற்கு இடங்கொடுக்கவில்லை.

இருப்பினும், கடந்த ஒக்டோபர் மாதம் யுவதி தனிமையில் இருந்தபோது சட்டத்தரணி வழங்கிய மதிய உணவு பார்சலை உட்கொண்டதையடுத்து மயக்கம் ஏற்படவே, அவரை காரியாலயத்தில் இருக்கும் ஓர் அறையில் வைத்து விருப்பம் இன்றி சட்டத்தரணி தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, யுவதியின் சம்பளம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில், நடந்த கொடுமையை எவருக்கும் தெரிவிக்காமல் யுவதி வேலையிலிருந்து நின்றுள்ளார்.
பொருளாதார நிலை
இதன்பின், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக அவரது சகோதரி அங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 2025 டிசம்பர் 28 அன்று சட்டத்தரணி ஒருவரைத் திருமணம் முடித்து வைத்துள்ளார்.
திருமணமான ஒரு வாரத்தில் யுவதி மயக்கமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் 12 வாரங்கள் கொண்ட (3 மாதம்) கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் கணவன் பிரிந்து சென்ற நிலையில், தேசிய சிறுவர்கள் பெண்கள் அமைச்சின் முறைப்பாட்டின் பேரில் யுவதி பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, காத்தான்குடி காவல்துறையினர் கடந்த 29 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்ததுடன், நேற்ற சட்டத்தரணியைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று மாலை ஐந்து மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது இருதரப்பு சட்டத்தரணிகளும் நீண்ட வாதங்களை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து எதிராளி தரப்பு சட்டத்தரணி எம்.ஐ.இயாஸ்டீன் கருத்துத் தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அது சட்டப்படி குற்றம் கிடையாது எனவும், மூன்று மாதம் கழித்துச் செய்யப்பட்ட முறைப்பாடு என்பதால் மேலதிக விசாரணைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வழக்கை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதியைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்