இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர வேண்டுகோள்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள்; கோவிட்-19 தொற்று காரணமாக இரத்து செய்யப்பட்டமையால் இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இப்பற்றாக்குறை காரணமாக அன்றாடம் நோயாளர்களுக்கு இரத்தம் தேவையேற்படும் பட்சத்தில் வழங்குவதில் நெருக்கடி ஏற்படும்.
மேலும் கணிசமான அளவு தலசீமியா நோயாளர்கள், புற்றுநோயாளர்கள், அத்துடன் கற்பகாலத்தில் ஏற்படும் குருதிபோக்கு, விபத்துக்களின் போது ஏற்படும் குருதிபோக்கு நிலமைகளின் போது குருதியை வழங்க வேண்டிய தேவையுள்ளது.
அத்துடன் களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்தே இரத்தம் வழங்கப்படுகின்றது.
எனவே குருதி வழங்க விரும்பும் கொடையாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலயின் இரத்த வங்கிக்கு வருகை தந்து வழங்கமுடியும்.
அதேவேளை இரத்தம் பெறமுன்னர் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் இரத்ததானம் செய்யும் போது கோவிட் தொற்றைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இரத்ததானம் செய்வதற்கு விரும்பும் பொதுமக்கள் 065-2226116 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இரத்ததானம் செய்வதற்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும்.