ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்
ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ல் இந்தியா (India) மற்றும் அவுஸ்திரேலியா (Australia) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் வெளிநாடு வீரர்களுக்கு புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற பின் திடீரென கடைசி நேரத்தில் விலகினால், அவர்கள் 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மெகா ஏலம்
அதேபோல் மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்களுக்கு இனி மினி ஏலத்தில் பங்கேற்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மினி ஏலத்தில் இந்திய வீரர் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுகிறாரோ, அதே தொகை தான் வெளிநாட்டு வீரர்களுக்கு ஊதியமாக அளிக்கப்படும்.
ஒருவேளை இந்திய வீரரை விடவும் அதிக தொகைக்கு வெளிநாட்டு வீரர் ஏலத்தில் சென்றாலும், அந்த கூடுதல் தொகை பிசிசிஐ சார்பாக வீரர்களின் பயன்பாட்டுக்கு பெற்று கொள்ளும். பெரும்பாலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மட்டுமே மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் பங்கேற்று வந்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இம்மாதம் நடக்கவுள்ள மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் பென் ஸ்டோக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
பென் ஸ்டோக்ஸ்
அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர், இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கவுள்ள ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்கவுள்ளது.
அதற்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் இருந்து விலகும் முடிவை பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இந்திய ரசிகர்கள் தரப்பில் பிசிசிஐ கொண்டு வந்துள்ள விதிகளே, பென் ஸ்டோக்ஸ்-ன் விலகலுக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. கடைசியாக சிஎஸ்கே அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடி இருந்தார்.
அப்போதும் காயம் காரணமாக சில போட்டிகளில் மட்டுமே பென் ஸ்டோக்ஸ் விளையாடிவிட்டு, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |