எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெற சிறந்த வழி கூறும் ரணில்
எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி தங்களுடன் இணைவதே என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்று (25) பிற்பகல் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை.
ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நான் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டேன்.
ஏற்றுக்கொண்ட நாட்டை சரியான திசையில் கொண்டு சென்று பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து 5 வருடங்கள் சென்றாலும் மீட்க முடியாது என எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறினாலும், 16 மாத குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்தது.
அதிகாரத்தைப் பெறுவதற்கான வழி
இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்திருக்கும்.
எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மாத்திரமே கவலைப்படுகிறார்கள். எவ்வாறு ஆட்சியைப் பிடிப்பது என்று சிந்திக்கிறார்கள்.
அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி எங்களுடன் இணைவதே என்று நான் அவர்களுக்குக் கூறுகின்றேன்.
எங்கள் அனுபவத்தைப் பெற்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்குமாறு நான் அவர்களிடம் கூறுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்வோம்” - என்றார்.