பூட்டானில் பனி ஏரி உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுப்பு:இந்தியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை
வடமேற்கு பூட்டானின் காசா (Gasa) மாவட்டத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஷிண்டபு பனி ஏரி உருகி நேற்று மாலையிலிருந்து நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.
இந்த நீர், மோ சூ நதி வழியாக தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து வருகிறது. பூட்டானில் உள்ள 17 ஆபத்தான பனி ஏரிகளில் இதுவும் ஒன்று.
பனி ஏரியில் ஒரு பகுதி உருகும்போதும் அதிலிருந்து நீர் அதிவேகமாக நீர் வெளியேறுவது பனி ஏரி உடைப்பு என அறியப்படுகிறது.
போக்குவரத்து தடை
இதனால் அங்கு காசா சாச்சு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப் பகுதியிலிருந்து மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் அப்பகுதியில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசன அமைப்பு வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. மேலும் புனாகா காசா சாலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பைகள் புகுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பூட்டானில் உள்ள புனாகா நகரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாங் பகுதியை வெள்ள நீர் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள நீரினால் இந்தியாவின் சங்கோஷ் நதியின் நீர்மட்டம் உயந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கோஷ் நதியானது வடக்கு பூட்டானில் தோன்றி, இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக பாய்ந்து பிரம்மபுத்திரா நதியுடன் கலக்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக பூட்டான் அதிகாரிகள் இந்தியாவை எச்சரித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |