தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் மிதிவண்டி பயணம் ஆரம்பம்
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் செப்ரெம்பர் 11 திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐ.நா நோக்கிய மிதிவண்டிப்பயணம் ஆரம்பமானது.
லண்டனில் இருந்து ஜெனிவா நோக்கிய இந்தப்பயணம் நாளை நெதர்லாந்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை நெதர்லாந்தில் இருந்து

வெலிங்ரன் பகுதியில் இன்று பகல் ஆரம்பித்த இந்த மிதிவண்டிப்பயணம் முதலில் பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தை நோக்கி பயணித்திருந்தது. இன்றைய பயணத்தை மேற்கொண்ட செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்களின் பணியகங்களுக்கு சென்று முறையீட்டு மனுக்களை கையளித்திருந்தனர்
அதன் அடிப்படையில் பிரதமர் பணியகம், உள்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றிலும் முறையீட்டு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன. இந்தமுறையீட்டு மனுக்களில், சிறிலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஐ.நா மனித உரிமைப்பேரவை முன்றலில்

அத்துடன் ஈழத்தமிழமக்களுக்கு நீதிவழங்க பிரித்தானிய அரசாங்கம் உடனடியாகக் காத்திரமான நடவடிக்கையில் ஈடுபடவேண்டுமெனவும் அதில் கோரப்பட்டிருந்தது
இன்று எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பயணமானது நாளை நெதர்லாந்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளூடாகப் பயணித்து, செப்ரெம்பர் 18 ஆம் திகதி சுவிற்சலாந்தில் உள்ள ஐ.நா மனித உரிமைப்பேரவை முன்றலில் நடைபெறவுள்ள பேரணியில் பேரெழுச்சியோடு இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.