ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு மூலக்கூறுகளுடன் வந்த மர்ம கப்பல்! உண்மை தகவல் என்ன?
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வேதியல் அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் குறித்து வெளிவரும் செய்தி தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார்.
குறிப்பிட்ட நாட்டின் தூதரகத்தின் வலுயுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் இதனை கண்டுகொள்ளாது மௌனம் காக்கின்றதா? இது உண்மையா? என கேள்வி எழுப்பினார்.
சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. நேற்று 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று வேதியல் அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது.
இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளனர். இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், அது தவறான செய்தி சென்றால் அது குறித்து அரசாங்கம் அறிவிக்க முடியும்.
ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.
துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌன கொள்கையை பின்பற்றி வருகின்றது.
ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதியல் அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தலாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இதனை ஆராய்ந்து உண்மை பொய் தன்மைகளை ஆராய்ந்து உண்மையென்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு ஆராய அனுமதிக்க வேண்டும்" என அவர் சபையில் வலியுறுத்தினார்.