3 மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த பில்லியன் கணக்கிலான வருமானம்
இலங்கை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்ச ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள் 834 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட வருமானமான 787 பில்லியன் ரூபாவை விட 6% அதிகம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களம்
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 381 பில்லியன் ரூபாவை விட 13% அதிகரிப்புடன் 430 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களம் 353 பில்லியன் ரூபா இலக்கை எட்டியுள்ளதாகவும், கலால் திணைக்களம் 96% வருமானத்துடன் 51 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4,106 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்க்கிறது, அதில் 93% வரி வருமானம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடி
இதேவேளை அரசாங்க வருமானம் குறைந்தமையே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல் காலாண்டில் இந்த இலக்குகளை தாண்டியமை மற்றும் வருமான முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2024 ஆம் ஆண்டு வருவாய் இலக்குகளை எட்ட முடியும் ஒரு ஆண்டாக அமையும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |