ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது பா ஜ க கூட்டணி
தமிழகத்தின் அயல் மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.
தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.
முன்னிலையில் தலைவர்கள்
குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 9088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோன்று புலிவேந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 34964 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். பிட்டாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் 40693 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
நடிகை ரோஜா பின்னடைவு
நகரி தொகுதியில் போட்டியிட்ட ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா இம்முறை பின்னடைவை சந்தித்து வருகிறார். ரோஜா 10376 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் பானு பிரகாஷ் 18388 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதேபோல், ஜெகன் கட்சியினருக்கு பல தொகுதிகளில் பின்னடைவே காணப்படுகிறது.
மக்களவை தொகுதி நிலவரம்
ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசமும், 4 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், 3 தொகுதிகளில் பாஜகவும், 2 தொகுதிகளில் ஜனசேனாவும் முன்னிலை வகிக்கின்றன. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் - 8 பாஜக - 8 என முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |