இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்கச் செய்து மதவெறியை விதைக்கிறது பா.ஜ.க :திருமாவளவன் குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்க செய்து மதவெறி உணர்வை பாஜக விதைத்து வருவது வேதனை அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் வெல்லும் ஜனநாயக மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, இன்று (30) வந்த அவர், செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை சிங்கள இன வெறி அரசு மேற்கொண்டுள்ளது. ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மத உணர்வை பரப்பி
இந்துக்களுக்காக தொண்டாற்றுகிறோம் என சொல்லும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடியெடுத்து வைத்து, இன உணர்வை நீர்த்து போக செய்யும் வகையில் மத உணர்வை பரப்பி வருகின்றனர்.
தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள்
இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதை பற்றி, அவர்கள் கவலைப்படவில்லை. தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டுவதன் மூலம் சிங்களர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை பாஜக பொருட்படுத்தாமல், தமிழ் தேசிய இன உணர்வை மங்கச் செய்து, மத வெறி உணர்வை விதைத்து வருவது வேதனை அளிக்கிறது.
தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்களவர்களின் ஆக்கிமிப்பில் இருந்து இந்திய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |