கரும்புலிகள் நாள் நிகழ்வும் “கல்லறைக்கீற்றுக்கள்” புத்தக வெளியீடும்!
தமிழீழ கரும்புலிகள் நாள் நிகழ்வும் இ.இ.கவிமகன் எழுதிய “கல்லறைக்கீற்றுகள்” என்ற தமிழீழ மாவீரர்கள் பற்றிய நினைவுபகிர்வுகள் சுமந்த புத்தகம் ஒன்றின் வெளியீடும் நடைபெற்றுள்ளது.
குறி்த்த நிகழ்வானது, கடந்த 05.07.2024 அன்று சுவீடன் (Sweden) நாட்டின் தலைநகர் ஸ்ரொக்கொமில் (Stockholm) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கரும்புலிகள் நினைவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், பொதுச்சுடரை தமிழீழ ஆதரவாளனும் தமிழீழத்தின் மீது அதீத பற்றும் கொண்ட பேராசிரியர் பீட்டர் சாள்க்ஸ் ஏற்றி வைத்து ஈகைச்சுடரினை மாவீரர் சகோதரியான ஜெகன்மோகன் ஆனந்தி ஏற்றி வைக்க மலர்வணக்கத்தை பேராசிரியர் பீட்டர் சாள்க்கின் மனைவி திருமதி பீட்டர் சாள்க்ஸ் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
நினைவுக் கவிதை
அதனைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு தலைமையுரையினைத் தொடர்ந்து கரும்புலிகள் நினைவுக் கவிதையினை அக்சயா சிவகுமார் கவிவணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து கல்லறைக்கீற்றுகள் நினைவுப்பகிர்வேட்டை எழுதிய இ.இ.கவிமகன் தனது புத்தகம் உருவாக்கம் பற்றியும் எதற்காக தான் அதை உருவாக்கனார் என்பதைப் பற்றியும் அதன் தேவை என்ன என்பது பற்றியும் மாவீரர்களின் தியாக வரலாறுகள் பற்றியும் தெளிவாக “என்பார்வையில் கல்லறைக்கீற்றுகள்” என்ற நினைவுப்பகிர்வை வழங்கியுள்ளார்.
தொடர் நிகழ்வாக புத்தகம் வெளியீடு செய்யப்பட்டு முதல் பிரதியினை புத்தக ஆசிரியர் இ.இ.கவிமகன் பேராசிரியர் பீட்டர் சாள்க்ஸ்க்கு வழங்கி கல்லறைக்கீற்றுகள் புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று சிறப்புப் பிரதிகளை ஜெகன்மோகன் ஆனந்தி வழங்கி ஆரம்பித்து வைக்க சிறப்புப் பிரதி பெறுபவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடற்புலி போராளி
தொடர்ந்து கடற்புலி போராளிகளான மருது, இசையமுதன் ஆகியோர் சிறப்புப் பிரதிகளை வழங்கினர். தொடர் நிகழ்வாக ஜெகன்மோகனால் கல்லறைக்கீற்றுகள் புத்தகத்தின் மதிப்பீட்டுரை சிறப்பாக வழங்கப்பட்டது.
“கல்லறைக்கீற்றுகள்” என்ற நினைவுப்பகிர்வு புத்தகத்தின் உள்ளடக்கங்கள் பற்றி மிக சிறப்பாக மதிப்பீட்டளித்த அவர் புத்தகத்தில் இருந்த சரியான பக்கங்கள் அனைத்தையும் வாழ்த்தியதோடு மட்டுமன்றி சுட்டிக்காட்டப்பட வேண்டியவற்றையும் சிறப்பாக சுட்டிக்காட்டி புத்தகத்தின் மதிப்பீட்டை வழங்கி இருந்தார்.
அதில் சுவீடன் நாட்டில் முதல்முறையாக தமிழீழ விடுதலைக்காக விதையாகியவர்களைப்பற்றிய கல்லறைக்கீற்றுகள் புத்தகத்தை வெளியிட்டு புது வரலாற்றை பதிவாக்கி இருக்கும் கவிமகனுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழீழம் நாளை பிறக்கும்
தொடர்ந்து பிரித்தானியாவில் வசித்துக்கொண்டிருக்கும் போராளி மருத்துவர் ஜோன்சனின் நினைவுப்பகிர்வு இணையவழியில் இடம்பெற அதில், மருத்துவப்பிரிவின் உருவாக்கம் தமிழீழ மருத்துவக்கல்லூரியின் உருவாக்கம் மற்றும் போராளி மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்போராளிகளின் போர்க்கால வாழ்வின் தன்மைகள் பற்றியும், கல்லறைக்கீற்றுகள் புத்தகத்தில் பதிவாகி இருந்த பல விடயங்களையும் தனது நினைவுப்பகிர்வில் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக நன்றியுரையினை முன்னாள் கடற்புலிப்போராளி மருது கூற , நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலோடு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |