கலவர பூமியாக மாறும் ஆப்கான்! 19 பேர் பலி- 50 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள இராணுவ வைத்தியசாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு குண்டு தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் சர்தார் தாவுட்கான் வைத்தியசாலைப்பகுதியில் முதல் தாக்குதலும் அதற்கு அருகில் அடுத்த தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தலிபான்களின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மருத்துவமனையை குறிவைத்து ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், 9 உயிரிழந்தனர். மேலும் சில தற்கொலைப் படையினர் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர்களுடன் தலிபான்கள் சண்டையிட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததில் இருந்து, அங்கு விமான நிலையம், பள்ளிவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்துவருகின்றன.
இந்நிலையில், ஆப்கன் இராணுவம் மற்றும் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் பலரும் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை தலிபான் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற உளவுத் துறை அதிகாரிகள் அந்த அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படும் நிலையில் ஆப்கன் முன்னாள் இராணுவ வீரர்கள், உளவுத் துறையினர் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கான சாத்தியக் கூறே இல்லை என்று தலிபான்கள் கூறுகின்றனர்.
இந்நிலையிலேயே நேற்றைய தினமும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மொத்தமாக 19 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரொசன் பிரிவினரே நடத்தியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.