புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும்: சுவிசில் வெளியிடப்பட்ட நூல்
ஜெனீவா அருந்தவராஜா எழுதிய 'புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும்' என்ற நூலுக்கான அறிமுக நிகழ்வு சுவிஸ் தலைநகர் பேர்ணில் வள்ளுவன் பள்ளியினரின் ஆதரவோடு 17.02.2024 இல் வெகு சிறப்பாக நடந்தேறியது.
கலாநிதி கல்லாறு சதீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சீன நாட்டில் இருந்து போராசிரியை நிறைமதி ( Niraimathi Kiki Zhang ) , சுவிஸ் வேலா கிறடிற் (VG Finance) உரிமையாளர் வேலா வரதன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
விழாவின் ஆரம்ப நிகழ்வாக அகவணக்கம் மற்றும் அண்மையில் நூலாசிரியரின் தாயார் காலமானதால் அவருக்கான மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேர்ண் பூரண இல்லப் பக்தர்களான சுவிஸ் நாட்டவர் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலைப் பாடி அரங்கினரின் வரவேற்பைப்பெற்றுக் கொண்டனர்.
பேர்ண் வள்ளுவன் பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஓதி நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை யாழ் பல்கலைக்கழக 85 /86 அணி சார்பாக தாமரைச்செல்வன் நிகழ்த்தினார்.
பேர்ண் வள்ளுவன் பள்ளியின் முதல்வர் பொன்னம்பலம் முருகவேள் தனது வாழ்த்துரையில் நூலாசிரியரின் ஆளுமைப் பண்புகளைச் சிறப்பித்து விபரித்ததோடு இந்த நூல் தமிழர்களின் புலப்பெயர்வில் ஏற்பட்ட வலிகளைத் திறம்பட எடுத்துரைப்பதாகவும் பாராட்டிப் பேசினார்.
நூல் வெளியீட்டரங்கில் தலைமை வகித்த கல்லாறு சதீஸ், நூலாசிரியரின் 5 நூல் வெளியீடுகளுக்கு தான் தலைமை வகித்ததாகவும் குறிப்பிட்டு, இந்த நூல் புலம்பெயர்ந்தவர்களின் வலிகளை மட்டுமல்ல வெற்றிகளையும் குறிப்பிடுவதாகக் கருத்துத் தெரிவித்தார்.
நூலுக்கான மதிப்புரை வழங்கிய கவிஞர் பொலிகை ஜெயா , இந்நூல் 34 தேசங்களில் தமிழர்கள் குடியேறிய வரலாறு பற்றிய பல தகவல்களோடு வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆய்வுரை நிகழ்த்திய திரைப்பட இயக்குநர் கார்த்தி, இந்த நூலைப் படிப்பவர்கள் வலியை அந்த இடங்களில் தாமே அனுபவிப்பதைப் போல உணர்வர்.
அந்த அளவுக்கு வலிகள் எழுத்துக்களில் நிறைந்திருப்பதாகக் குறிப்பிட்டதோடு அவற்றை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் திரைப்படம் தயாரிக்கப் போவதாகவும் குறிப்பிடிருந்தார்.
நூலாசிரியர் தனது ஏற்புரையில் தமிழர் புலம்பெயர்ந்த வரலாற்று நிகழ்வுகள் பல மறக்கப்பட்டவையாக அல்லது மீள நினைவு படுத்த முடியாத வரலாற்று மறைவாக இருப்பதால் அவற்றைத் தேடி ஆவணப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
சிறப்புரை வழங்கிய ஊடகர் சண் தவராஜா, புலம்பெயர் சாவால்கள் தொடர்பாக ஆய்வுரீதியாக உரையாற்றி நிகழ்வுக்கு மேலும் வலுச் சேர்த்தார்.
பல் துறை ஆளுமை வித்தகன் சுரேஸ் புலம்பெயர் அனுபவங்கள் தொடர்பாக சரவெடியாகப் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் .கலை வளரி வாவிபாஸ்கர் தனது புலம்பெயர் அனுப்பவங்களை நகைச்சுவை தடவிய வலியை வெளிக் காட்டும் பேச்சாக நிகழ்த்தினார். ஜேர்மனியில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் இரமேஸ், புலம்பெயர்ந்த தமிழர் சிலரின் மேலாண்மை தொடர்பாக தனது கருத்துகளை வேதனையுடன் முன்வைத்தார்.
பேர்ண் ஞானலிங்கேசுவரர் கோவில் அருட்சுனையர் சிவரிசி சசிக்குமார் ஐயா , இந்த நூல் ஒரு வரலாற்றுப் பதிவு எனவும் தான் மொறிசியஸ் நாட்டுக்கு சென்றிருந்த போது அங்கு அடிமைகள் கொண்டு வரப்பட்டு, இறக்கப்பட்ட இடத்தில் சம்பளமின்றி வேலைக்கு வந்தவர்கள் இறங்கிய இடம் என பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததாகவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
கவிஞர் ரூபா அன்ரன் , அழகிய கவி படித்து சபையோரை தமிழ் இரசம் பருக வைத்தார்.
கவிஞர் இன்பம் அருளையா, இசை வருதி முகிலரசன் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவான பாடல்கள் சிலவற்றை சுவிஸ் இளையோர்கள் பாடி அரங்கினரை மகிழ்வித்தனர்.
பிரபல நடன ஆசிரியையான வாணி சர்மா அவர்களது மாணவியின் வரவேற்பு நடனம் அரங்கினரின் பெருவரவேற்பைப் பெற்றுக் கொண்டது.
சீனப் பேராசிரியை நிறைமதி புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் என்ற நூலானது பல்வேறு தகவல்களை வழங்குவதாகவும் ஆராய்சி மாணவர்களுக்கு அது மிக்க பயனுடையதாக அமையும் எனவும் தனது உரையில் தெரிவித்தார். மேலும் அவர் சீனருக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்புகளையும் தெளிவாக எடுத்துரைத்தார் .
நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்து தயாமோகன் , சுவிஸ் இளம் பெண் அறிவிப்பாளர் கார்த்திகா முரளிதரனும் நிகழ்வை சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.